மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “உலகளவில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்களைக் கொன்றுகுவித்த கரோனா தீநுண்மி இயற்கையானது அல்ல; இது மனிதனால் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. கரோனாவுடன் வாழும் கலையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தச் செயற்கைத் தீநுண்மி பாதிப்பை எதிர்கொள்ள உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் தடுப்பூசி பற்றி ஆராய்ச்சி செய்துவருகின்றன” என்றார்.
மேலும், “கரோனா சவாலை சந்திக்க இந்தியா தயார் நிலையில் உள்ளது. நமது விஞ்ஞானிகளும் தயார்நிலையில் இருக்கின்றனர். அதற்கான தீர்வை எட்டிய பிறகு நாம் இது குறித்து விவாதிக்க முடியும்.
இதனைத் தடுக்க தடுப்பூசி உருவாக்க வேண்டும். மாற்று வழி ஒன்றையும் கண்டறிய வேண்டும். அது பிரச்னையை தீர்க்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
உலகை உலுக்கும் கொடிய தீநுண்மியின் தோற்றம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவிப்பது இதுவே முதல்முறை. அதுவும் ஒரு மூத்த அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவே இது பார்க்கப்படுகிறது. கரோனா தீநுண்மி சீனாவின் ஆய்வகத்திலிருந்து உருவானதாக ஏற்கனவே பல்வேறு நாடுகள் குற்றஞ்சாட்டிவருகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பல சந்தர்ப்பங்களில், கரோனா தீநுண்மி சீனாவால் உலகம் முழுவதும் பரவியது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் அதை 'சீன தீநுண்மி' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் இந்தப் பேச்சுக்கு சீனத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதற்கிடையில், கரோனா தீநுண்மி தொற்றுநோயைக் தவறாக கையாண்டதற்காக பல அரசாங்க நிறுவனங்கள் சீனாவுக்கு எதிராக நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளன என்று தி வாஷிங்டன் போஸ்ட் ஏப்ரல் 30ஆம் தேதி செய்தி வெளியிட்டது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஜான் ஹாப்கின் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 பாதிப்பு 43 லட்சத்தை எட்டியுள்ளது. இறப்பு எண்ணிக்கை 2.92 லட்சத்தை தாண்டியுள்ளது.
இதையும் படிங்க: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 2-3 நாள்களில் உதவித் தொகை - நிதின் கட்கரி நம்பிக்கை