நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் இன்று நோட்டீஸ் ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையான சாவித்ரிபாய் பூலேவின் படத்தை ரூபாய் நோட்டில் அச்சிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
ரூபாய் நோட்டில் சாவித்ரிபாய் பூலே படம் - ரவிக்குமார் எம்.பி - மக்களவை
டெல்லி: இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையான சாவித்ரிபாய் பூலேவின் படத்தை ரூபாய் நோட்டில் அச்சிட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் நோட்டீஸ் அளித்துள்ளார்.
மகாரஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சாவித்ரிபாய் பூலே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் ஆவார். பெண்களின் கல்வியை ஊக்குவிக்க வகையில், இந்தியாவிலேயே முதல்முறையாக பூனேவில் பெண்களுக்கெனத் தனி பள்ளியையும் நடத்தி வந்தவர். அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் முக்கிய சமூக சேவை செய்தவரான ஜோதிராவ் பூலே இவரது கணவர் ஆவார். இந்தியாவில் பெண்கள் கல்வி கற்பதில் முக்கிய பங்காற்றிய சாவித்ரிபாய் பூலேவின் பங்களிப்பைப் போற்றும் வகையில் 1998ஆம் ஆண்டு இந்திய அரசு தபால் தலையையும் வெளியிட்டது.
இந்திய ரூபாய் நோட்டுகளில் இதுவரை மகாத்மா காந்தியின் படம் மட்டுமே அச்சிடப்பட்டு வரும் நிலையில், மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் சாவித்ரிபாய் பூலேவின் புகைப்படம் ரூபாய் நோட்டில் இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.