இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும் இணையம் மூலம் இணைப்பதால் கிராமப் பொருளாதாரம் வளர்ச்சியை காணும் என்பதை உணர்ந்த மத்திய அரசு, பாரத்நெட் என்ற திட்டம் மூலம் கிராமங்களுக்கு அதிவேக இணைய சேவை அளித்து வருகிறது. வைஃபை வசதி மூலம் அளிக்கப்படும் இந்த இணைய சேவையை, ஆண்டிற்கு ரூ. 7000 முதல் ரூ. இரண்டு லட்சம் வரை கொடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போதையை நிலவரப்படி, இந்த திட்டத்தின் கீழ் சுமார் 48 ஆயிரம் கிராமங்கள் பயனடைந்துள்ளன.
இந்நிலையில், பாரத்நெட் சேவை பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் வரும் 2020 மார்ச் மாதம் வரை அதனை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரவி சங்கர் பிரசாத், "1.3 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு பாரத்நெட் திட்டம் மூலம் இணைய சேவை அளிக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைய சேவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பாரத்நெட் சேவை பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் வரும் 2020 மார்ச் மாதம் வரை அதனை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார்.