திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஊராட்சி அருகே கடல் மார்க்கமாக வரும் சரக்கு பெட்டகங்களை சாலை வழியாக கொண்டு செல்லும் திட்டமாக மாமல்லபுரம் முதல் எண்ணூர் துறைமுகம்வரை நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்து அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த திட்டம் செயலுக்கு வந்தால் அங்குள்ள வீடுகள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் அழியும் அபாயம் உள்ளது; அதனால் மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் முறையிட்டனர். மேலும் இந்த திட்டத்தை பற்றி எங்களிடம் எவ்வித கருத்து கேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை என குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள் இதனை கண்டித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
நான்கு வழிச்சாலையை கைவிட கோரி பொதுமக்கள் கோரிக்கை திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஊராட்சி சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு இந்த கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவில் ஊராட்சி வழியாக நான்கு வழிச்சாலை திட்டம் செயலுக்கு வந்தால் பெரும்பாலான குடியிருப்புகள், விவசாய நிலங்கள், ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் அழியும் அபாயம் உள்ளது. மேலும் இது தொடர்பாக இதுவரை எங்களிடம் எவ்வித கருத்து கேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை என கூறியிருந்தனர்.
மேலும் இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த தமிழ் என்பவர், இந்த ஊராட்சியில் வசிக்கும் அனைவரும் நடுத்தர வர்க்கத்தினர் வங்கி கடன், பத்திரம் அடமான கடன் உள்ளிட்டவைகளை வாங்கி வீடு கட்டி உள்ளனர். இந்த நிலையில் சாலை வழியாக குடியிருப்பு பகுதிகளை அழித்தால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். கிராமத்தில் 20% அளவில் விவசாயம் உள்ளதால் விவசாய நிலங்களும் முற்றிலுமாக அழியும் அபாயம் உள்ளது. எனவே அரசு எங்களிடம் முழுமையாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.