கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இரவில் திருடர்கள் மற்றும் கொள்ளையர்கள் சுற்றி வருவதாக, கடந்த சில நாட்களாக பால்கர் மாவட்டத்தின் பழங்குடிப் பகுதிகளில் வதந்தி பரவி வருகின்றன. இந்நிலையில், வியாழக்கிழமை காலை 8 மணியளவில் தபாடி-கானேவால் வழித்தடத்தில், நாசிக் நகரிலிருந்து வரும் ஒரு வாகனத்தை காடிங்கில் கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரித்த பின்னர் திருடர்கள் எனக் கருதி அவர்களையும் வாகனத்தையும் கற்கள் மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில், டிரைவர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வந்தவுடன், ஒரு கும்பல் காவல் துறையினரின் வாகனங்கள் மீதும் கற்களை வீசியது. இது தொடர்பாக 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.