உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் எட்டு காவலர்களைக் கொலைசெய்த வழக்கு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி விகாஸ் துபே கடந்த ஜூலை 10ஆம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இதனிடையே, துபே மற்றும் அவரின் கூட்டாளிகள் என்கவுன்ட்டர் தொடர்பான வழக்குகளில் நீதிமன்ற விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, துபே தொடர்பான என்கவுன்ட்டர் வழக்கின் விசாரணைக் குழுவில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, ஓய்வுபெற்ற காவல் துறை அலுவலர் ஆகியோரை உத்தரப் பிரதேச அரசு நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. துபேவுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு இருந்தாலும், அவருக்குப் பிணை கிடைத்திருப்பது திகைப்பாக உள்ளது என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதுகுறித்து நீதிமன்றம் மேலும் கூறுகையில், "ஒரு அரசாகச் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும். அது உங்களின் கடமை. விசாரணைக் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்கக் காலதாமதம் செய்யக் கூடாது. சிறைக்குச் செல்ல வேண்டிய ஒருவருக்குப் பிணை கிடைத்திருப்பது மிகப் பெரிய தோல்வியாகும்" என்றது. உத்தரப் பிரதேச அரசுக்கு ஆதரவாக ஆஜராகிய அரசின் துணை தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, இதுகுறித்து முடிவெடுக்க சற்ற நேரம் வேண்டும் என தெரிவித்தார்.