கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் பாதுகாப்பற்ற முறையில் தகனம் செய்ய கொண்டு செல்லப்படுவதாக, காணொலி ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது.
அந்தக் காணொலியில், கொல்கத்தா மாநகராட்சி பணியாளர்கள் சிதைந்த உடல்களை தகனம் செய்வதற்காக வேனில் ஏற்றும் காட்சியும், ஒரே இடத்தில் பல சிதைந்த உடல்களை தகனம் செய்வதற்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
இந்தக் காணொலி குறித்து மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தங்கர் கவலை தெரிவித்ததோடு, இந்தச் சம்பவம் குறித்து மாநில உள்துறை செயலாளர் அறிக்கையளிக்க கோரினார்.
மேலும் அவர் பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவில் ”உயிரிழந்தவர்களின் உடல்களை இதயமற்ற, உணர்வற்ற தன்மையுடன் அப்புறப்படுத்தும் செயல் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நம் சமூகத்தில், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மிக உயர்ந்த மரியாதை உண்டு” எனப் பதிவிட்டிருந்தார்.
இதனிடையே மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை அமைச்சகமும், கொல்கத்தா காவல் துறையும், சர்ச்சைக்குரிய காணொலி போலியானது என்றும், இவை மருத்துவமனை பிணவறையிலிருந்து உரிமை கோரப்படாத உடல்கள் எனவும் விளக்கமளித்துள்ளது.
என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சாய்பால் குமார் முகர்ஜி, கொல்கத்தா காவல் ஆணையர் அனுஜ் ஷர்மாவுக்கு எழுதிய கடிதத்தில், "இந்த உடல்கள் கரோனா நோயாளிகளுடையது அல்ல. இந்தக் காணொலி போலியானது, இது தொடர்பாக நீங்கள் தேவையான நடவடிக்கை எடுக்கலாம்" என்று தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் ஜெக்தீப் தங்கர் பதிவிட்ட மற்றொரு ட்வீட்டில், “மேற்கு வங்க உள்துறை அமைச்சகத்திடமிருந்து விளக்கங்கள் பெறப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்களைக் கையாள்வது குறித்து மெய்நிகர் ஒப்புதல் நடைமுறைப்படுத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா அமைச்சருக்கு கரோனா; பீதியில் அரசியல் பிரமுகர்கள்