இது தொடர்பாக ஜி மாதவன் நாயர் கூறுகையில், "அண்மையில் வெளியாகியுள்ள சில ஊடக அறிக்கைகள் மூலமாக இந்திய விண்வெளித் துறை மறுகட்டமைப்பு, விரிவாக்கம் குறித்து அறிய முடிகிறது.
விமர்சனம் முன்வைக்கும் சிலர், இந்திய விண்வெளித் திட்டம் குறித்தும், அதற்கு தேவையான தொழில் துறை பங்களிப்புகள் குறித்தும் அபத்தமான கருத்துகளை முன்வைப்பதையும் பார்க்க முடிகிறது.
உண்மையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் விரிவாக்கத்தை உறுதி செய்வதற்கான செயல்திட்டங்களை மத்திய அரசு கொண்டிருக்கிறது.
இதுவரை ஏற்பட்ட பரிணாமத்தையும் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு உண்மை நிலைமையை அறிய பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்ற வகையில் சிலவற்றைப் பற்றி கூறலாம் என நினைக்கிறேன்.
தற்போதைய மத்திய அரசானது, அதிநவீன விண்வெளி தொழில்நுட்பங்களை முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதோடு, சாதாரண மனிதர்களின் தேவைகளையும் பாதுகாப்புத் துறையின் தேவைகளையும் ஒரே நேரத்தில் பூர்த்தி செய்யும்வகையில் விண்வெளிப் பயணங்களுக்கான மாற்றுத்திட்டங்களை முன்வைத்துள்ளது.
இந்தத் திட்டம், தொலைநோக்கு அணுகுமுறையை வைத்திருக்கிறது. இது உலக விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியாவிற்கு ஓர் முதன்மையான இடத்தை வழங்கும் திட்டம் என்றே சொல்லலாம்.
இஸ்ரோ உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையில் மட்டுமல்லாமல், தொலை-கல்வி, தொலை-மருத்துவம், பேரிடர் உயர் மேலாண்மை, விவசாயத்திற்கான அறிவியல் பங்களிப்பு, மீன்வளம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற சமூக நலனுக்கான உதவிகளையும் வழங்கிவருகிறது.
இந்தியாவின் கடந்த ஆண்டு விண்வெளி ஆய்வுத்துறைக்கான பட்ஜெட் சீனா, அமெரிக்கா நிதி ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும்போது சற்றே ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக ஒதுக்கி உள்ளதை அறியலாம்.
நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி முன்னேற்றத்திற்காக இஸ்ரோவிடம் தற்போதுள்ள தொழிற்நுட்பங்களை பயன்படுத்த தனியார் துறை அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது, செயற்கைக்கோள்கள், ஏவுதல்கள் மற்றும் விண்வெளி அடிப்படையிலான சேவைகளில் சிறந்த முன்னேற்றத்தை வழங்கும்.
இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனமான, எஸ்.எல்.வி 3-க்கு பிறகு தொழில்துறையினருடன் உற்பத்திப் பொறுப்பை பகிர்ந்து கொண்டது.எனவே, தனியாரோடு இணைந்து மறுகட்டமைப்பு செய்யும் அரசின் திட்டம் என்பது மிக சிறந்ததுதான்.
இன்று தொழில்துறையினரால் தயாரிக்கப்படும் கிரையோஜெனிக் இயந்திரங்கள் கூட இஸ்ரோவால் பயன்படுத்தப்பட்டு வருகிற ஒன்றுதான்.