கரோனா அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை (செப்டம்பர் 14) தொடங்கி வரும் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத் தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து உறுப்பினர்களும் 72 மணி நேரத்திற்கு முன்பாக கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநிலங்களவை தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு கரோனா பரிசோதனை மேற்கொண்டதாக துணை குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்றம் வெளியிட்ட அறிக்கையின்படி, "அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு மருத்துவமனை / ஆய்வகத்திலும் அல்லது நாடாளுமன்ற மாளிகை வளாகத்திலும் அமர்வு தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்குள் உறுப்பினர்கள் அனைவரும் சோதனையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தகுந்த இடைவெளி விதிமுறைகளை உறுதி செய்வதற்காக, மாநிலங்களவை அறை, காட்சியகங்கள், மக்களவை அறை ஆகியவை இருக்கை உறுப்பினர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். அறையில் நான்கு பெரிய காட்சித் திரைகள் உறுப்பினர்கள் பேசுவதைக் திரையிட வைக்கப்பட்டிருக்கும். மேலும், மாநிலங்களவை தொலைக்காட்சியில் அமர்வின் நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.