டெல்லி: ஸ்டெர்லைட் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆலை நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட்ஆலையைத் திறக்கக்கோரி, ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கை அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு அரசு விதித்த தடையை அகற்ற இயலாது என்று தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என ஸ்டெர்லைட்நிர்வாகம் கூறியிருந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 26) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக, தங்கள் தரப்பைக் கேட்காமல் முடிவை மாற்றக்கூடாது என எதிர்தரப்பான மக்கள் அதிகாரம் அமைப்பு, தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2018ஆம் ஆண்டு இந்த ஆலையை மூடக்கோரி ஏராளமான பொதுமக்கள் இணைந்து போராட்டங்களை நடத்தினர். அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்த போராட்டம் நாடு முழுவதிலும் பலரின் கவனத்தை ஈர்த்தது.
தொடர்ந்து, மிகவும் முக்கிய நிகழ்வாக 2018ஆம் ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தில் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி உள்பட அப்பாவி மக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழ்நாடு அரசால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.