முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்காக, எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் 10 சதவீதத்தை பறித்து வங்கி அலுவலர்கள் தேர்வு நடைபெற்றது. மத்திய அரசால் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், இட ஒதுக்கீடு மோசடியைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (அக். 16) மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைற்றது.
அந்தவகையில், புதுச்சேரியில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மோடி அரசு சமூக நீதிக்கு எதிரான அரசு - தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு! இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “மோடி அரசு சமூக நீதிக்கு எதிரான அரசு. மோடி அரசின் அனைத்து சட்டங்களும் பெரும்பான்மை சமுதாயத்திற்காக இயற்றப்படுகிறது. மருத்துவப் படிப்பிற்கான மத்தியத் தொகுப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் ஓபிசி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து உள்ளது. இதன் காரணமாகவே மத்திய அரசு பெரும்பான்மை சமுதாயத்திற்கான அரசு என்பதை உறுதி செய்துள்ளது” எனக் குற்றஞ்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், வங்கி அலுவலர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க...தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி எம்பி ரவீந்திரநாத்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி