புதுச்சேரி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அச்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி முதன்மை செயலாளர் தேவ. பொழிலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கலந்துகொண்டார். இதில் விசிகவினர் பலர் கலந்துகொண்டு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. ரவிக்குமார், "மத்திய அரசு இயற்றிய வேளாண் விரோத சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கிறோம். கமிட்டி அமைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என மோடி அரசு இறங்கி வந்துள்ளது . இதில் வரட்டு கௌரவம் பார்க்காமல் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று குறைந்தபட்ச ஆதாரவு விலையை உறுதிப்படுத்தும் விதமாக சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். இதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. தமிழ்நாடு அரசே அந்த சட்டத்தை இயற்ற வேண்டும். புதுச்சேரியில், இச்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் முதலமைச்சரே சட்ட நகல்களை கிழித்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற சொல்லி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:சசிகலா நலமாக இருக்கிறார்! - டிடிவி. தினகரன் தகவல்!