உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் கொடூரமாக கொல்லப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரி மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடலூர் மாவட்டம் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் ஏராளமான ஊராட்சி மன்றங்களில் தலித் தலைவர்களுக்கு எதிராக, இப்படிப்பட்ட கொடுமைகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.
கிட்டத்தட்ட 2,200 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள தலித் தலைவர்கள் சுதந்திரமாகச் செயல்படுகிறார்களா என்பது கேள்விக்குறிதான்.
தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் உள்ள தலித் ஊராட்சி மன்றங்களில், தலைவர்கள் சுதந்திரமாக இருக்கையில் அமர்ந்து செயல்பட முடிகிறதா, அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்த முடிகிறதா, அவர்களுக்குச் சாதிய நெருக்கடி உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
அவ்வப்போது வெளிப்படும் பிரச்னைக்கு மட்டும் நடவடிக்கை என இல்லாமல், மாநிலம் முழுவதும் இதைக் கண்டறிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும். மேலும், தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிப்பு குறித்து அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்“ என்று கூறினார்.
தொடர்ந்து, தனிச்சின்னத்தில் போட்டியிடப்போவதாக மதிமுக அறிவித்துள்ளது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “திமுக கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணி கட்சிகள் மீது திமுக எந்தக் கருத்தையும் திணிப்பதில்லை. நாடாளுமன்றத் தேர்தலில்கூட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக கூறியதற்கு காரணம், புது சின்னம் எதிரிக்கு சாதகமாகிவிடக் கூடாது, அதனால் வெற்றி பாதித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.
தலித் ஊராட்சி தலைவர் அவமதிப்பு - வெள்ளை அறிக்கை வெளியிட திருமா வலியுறுத்தல் அதனை, கூட்டணி கட்சிகளின் தன் மதிப்பை சீர்குலைக்கும் முடிவாக நாங்கள் கருதவில்லை. ஆனாலும்கூட நாங்கள் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று சொன்னபோது, எங்கள் உணர்வை மதித்து திமுக நடந்துகொண்டது. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எங்களுக்கிடையே நல்ல இணக்கமான முடிவை எடுப்போம் ” என்றார்.
இதையும் படிங்க: ஸ்டான் சுவாமியைக் கைது செய்து மத்திய அரசு என்ன சொல்ல விழைகிறது? ஹேமந்த் சோரன் கேள்வி