எல்கர் பரிஷத் வழக்கில் இந்தியா முழுவதும் உள்ள முக்கியச் சமூகச் செயற்பாட்டாளர்கள் 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை முதலில் புனே காவலர்கள் விசாரித்து வந்தநிலையில், சமீபத்தில் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தெலங்கானா கவிஞர் வரவர ராவ்(80), மகாராஷ்டிரா மாநிலம் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 22 மாதங்களாகச் சிறையில் இருக்கும் அவர், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தனது மருத்துவச் சிகிச்சைக்காகப் பிணை கோரியிருந்தார்.
அவருக்குப் பிணை தொடர்ச்சியாக மறுக்கப்பட்டுவந்த நிலையில், அவருக்கு நரம்பியல் தொடர்பான பாதிப்புகள் வரத் தொடங்கின. சிறையில் சக தோழர்களிடம், அவர் மனநலம் சரியில்லாதவர்போல் பேசிவந்துள்ளார். தனது குடும்பம் தனக்காகச் சிறைக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது போலவும் தனது தாய், தந்தையர் மரணம் குறித்தும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களைத் தொடர்ச்சியாகப் பேசிவந்துள்ளார்.