தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வந்தே பாரத் மிஷன் 3.0 : இந்தியர்களை தாயகம் அழைத்துவர செல்லவிருக்கும் 165 விமானங்கள்! - வந்தே பாரத் மிஷன் 3.0

டெல்லி : கோவிட்-19 உலகளாவிய பயண முடக்கத்தால் வெளிநாடுகளில் சிக்கி தவித்துவரும் இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் ஜூன்11 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

வந்தே பாரத் மிஷன் 3.0 : இந்தியர்களை தாயகம் அழைத்துவர செல்லவிருக்கும் 165 விமானங்கள்
Vande bharat mission 58 more flights to evacuate Indians stranded in Gulf countries

By

Published : Jun 11, 2020, 2:14 AM IST

கரோனா வைரஸ் பரவல் நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்துவரும் லட்சக்கணக்கான இந்தியர்களைத் தாயகம் அழைத்துவர மே 7ஆம் தேதி முதல் மத்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது.

வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்துவர ‘வந்தே பாரத் திட்டம்’ என்ற பெயரில் அரசின் விமானங்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மத்திய வெளியுறவுத் துறையின் கண்காணிப்பின் கீழ் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி அமெரிக்கா, கனடா, ஓமன், குவைத், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் சிக்கியிருந்த 80,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

மே 7ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதிவரை முதல்கட்ட மிஷனும், இதையடுத்து மே 17ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதிவரை இரண்டாம் கட்ட மிஷனும் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது கட்ட வந்தே பாரத் மிஷனை ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை செயல்படுத்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

மூன்றாவது மிஷனில் கூடுதலாக 58 விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளதால் மக்களை மீட்டு வரும் பணிக்கு மொத்தமாக 165 விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக அறிய முடிகிறது.

இது தொடர்பாக பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “வளைகுடா நாடுகளிலிருந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வரும் பணிகளுக்காக பிரத்யேகமாக இன்று முதல் ஜூன் 30ஆம் தேதிவரை சிறப்பு விமானங்களை இயக்க அரசு முடிவெடுத்துள்ளது. மருத்துவ, நிர்வாக அலுவலர்களுக்கு உதவி ஊழியர்களுடன் நிவாரணப் பொருள்கள், கோவிட் -19 பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படும்.

தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து, சுகாதாரப் பராமரிப்புடன் அவர்கள் அனைவரும் அழைத்துவரப்பட உள்ளனர். சிறப்பு விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், நீரிழிவு நோய் அல்லது ஏதேனும் சுவாச நோய் இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படும்.

அதில் அறிகுறியற்ற பயணிகளும், பாதிக்கப்பட்ட பயணிகளும், தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் சிறப்பு சீருந்துகள், அரசின் சொகுசு பேருந்துகள் மூலம் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மாற்றப்படுவர்” என தெரிவித்தார்.

இதுவரை இயக்கப்பட்ட விமானங்களின் மூலமாக 24 நாடுகளில் இருந்து எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details