எகிப்து நாட்டின் கெய்ரோவிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின்படி இரண்டாவது முறையாகவிமானம் மும்பை, கொச்சினுக்கு 3 குழந்தைகள் உள்பட 235 பயணிகளுடன் புறப்பட்டது.
எகிப்து தூதரகம் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கும் வாழ்த்து தெரிவித்து அனுப்பிவைத்தது. அவர்களின் ஆதரவுக்கு எகிப்தில் உள்ள இந்தியத் தூதரகம் நன்றி தெரிவித்து ட்வீட் செய்தது.
கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த விமான பயணத்தின் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைத் திரும்பக் கொண்டுவருவதற்கான மத்திய அரசின் முயற்சியே வந்தே பாரத் திட்டம்.
வந்தே பாரத் திட்டத்தின்கீழ் 29 ஆயிரத்து 34 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 375 பேர் நாடு திரும்பி வந்துள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.
இந்த முயற்சி மே 7ஆம் தேதி தொடங்கியது. அதன் இரண்டாம் கட்டம் மே 16ஆம் தேதி தொடங்கியது. மூன்றாவது கட்டம் ஜூன் 11ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 வரை தொடரும்.