தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழர்களுக்காக தெலங்கானாவில் உதயமாகிய தமிழ்ச் சங்கம்! - கார்த்திகை வனபோஜனம்

ஹைதராபாத்: தெலங்கானா தமிழ்ச் சங்கம் சார்பில் வனபோஜன நிகழ்வு, ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

Telangana tamil sangam
Telangana tamil sangam

By

Published : Dec 2, 2019, 3:21 PM IST

Updated : Dec 4, 2019, 12:51 AM IST

தெலங்கனா மாநிலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வனபோஜன நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வின்போது நகருக்கு வெளியே அமைந்திருக்கும் காட்டுப் பகுதிகளுக்கு குடும்பம் குடும்பமாக சென்று உரையாடிவிட்டு, அனைவரும் ஒன்றாக சேர்ந்து உணவருந்துவது வழக்கம்.

அந்த வகையில் தெலங்கானா தமிழ்ச் சங்கம் சார்பில் வனபோஜன நிகழ்வு ஹைதரபாதிலுள்ள கோம்பள்ளி அருகே நடைபெற்றது. ராஜஸ்தான் மாநில பண்பாட்டை பறைசாற்றும் விதமாக திகழும் தோலா ரீ தானி என்ற இடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஹைதராபாத் நகரில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை ஹைதராபாத் தமிழ் பிரெண்ட்ஸ் அசேஷியேஷன் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததது.

இந்த அமைப்பானது, தெலங்கானா தமிழச் சங்கம் என்று பெயரை மாற்றி அம்மாநில அரசிடம் பதிவு செய்து அதுதொடர்பான சான்றிதழையும் பெற்றுள்ளது. இதுபற்றி இந்த நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன், சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன. பின்னர் கேக் வெட்டி தெலங்கானா தமிழ்ச் சங்கம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

தமிழர்களுக்காக தெலங்கானாவில் உதயமாகிய தமிழ்ச் சங்கம்

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கணவன் - மனைவி, குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சி குறித்து சங்க நிர்வாகிகளுள் ஒருவரான ராஜ்குமார் கூறுகையில், ‘ஹைதராபாத் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் வாழும் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தமிழர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழர் பாரம்பரியம், கலாச்சாரத்தை கற்பிக்கும் விதமாகவும் செயல்படவுள்ளோம்’ என்றார்.

தொடர்ந்து சங்கத்தின் தலைவர் சிவக்குமார் பேசியதாவது, ‘தெலங்கானா மாநிலத்தில் வசிக்கும் அனைத்து தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் விதமாக இந்த சங்கம் செயல்படும். விரைவில் சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளது. தமிழர்களுக்கென தமிழ் பவனம் ஒன்றை அமைப்பதே முக்கியமான குறிக்கோள். மேலும், தெலுங்கானாவில் பிறந்து வளர்ந்த நமது குழந்தைகளுக்கு தமிழ் கல்வியை கற்றுக்கொடுக்கவும், நூலகம் ஒன்றை ஏற்படுத்தி தமிழ் புத்தகங்களை வாசிக்க வாய்ப்பை அளிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும்’ என்றார்.

Last Updated : Dec 4, 2019, 12:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details