நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. பல முக்கிய மசோதாக்களை மத்திய அரசு இந்தக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றும் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா டிசம்பர் 9ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவையில் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவாதத்தில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, "நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுவதை அண்ணல் காந்தியடிகள் பார்த்திருந்தால், யமுனா நதிக்கரையை போராட்டக் களமாக மாற்றியிருப்பார்.
மோசமான, ஜனநாயகத்திற்கு விரோதமான, நியாயமற்ற, மன்னிக்க முடியாத, சட்டத்திற்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டால், மாநிலங்களவை வரலாற்றில் கறுப்பு அத்தியாயமாக இது குறிப்பிடப்படும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பகைமை உணர்வுடன் அணுகுகிறது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமியர்கள் அல்லாதவருக்கு குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாகுபாடு காண்பிக்கப்பட்ட மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்படவில்லை. ஷியா, அஹமதியா ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கும் பாகுபாடு காண்பிக்கப்பட்டுவருகிறது. ஆனால், அவர்களுக்கும் குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை.