இது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநில உள் துறையை கவனித்துவரும் கூடுதல் தலைமைச் செயலர் அவனிஷ் கே அவஸ்தி கூறுகையில், "ஹத்ராஸ் கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடர்பான விரிவான விசாரணையை மேற்கொள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவின்பேரில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) ஒன்று அமைக்கப்பட்டது.
உயிரிழந்த பட்டியலின பெண்ணின் குடும்பத்தினரின் வாக்குமூலங்களை கடந்த ஞாயிறன்று (அக். 04) எஸ்.ஐ.டி. பெற்றது.
அதனடிப்படையில் அளித்த முதல்கட்ட அறிக்கையின்பேரில், கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட குற்றச்சாட்டில் ஹத்ராஸ் எஸ்.பி., டி.எஸ்.பி., ஆய்வாளர் உள்ளிட்ட சில அலுவலர்களை மாநில அரசு இடைநீக்கம் செய்தது.