தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹத்ராஸ் விவகாரம்: 15 நாள்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு வலியுறுத்தல் - ஹத்ராஸ் விவகாரம்

லக்னோ: ஹத்ராஸ் வழக்கு குறித்து 15 நாள்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஹத்ராஸ்
ஹத்ராஸ்

By

Published : Oct 14, 2020, 7:51 PM IST

ஹத்ராஸ் விவகாரம் குறித்த விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ள நிலையில், 15 நாள்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. முன்னதாக, வழக்கு குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஹத்ராஸ் குறித்து சுதந்திரமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு காவல்துறை மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது. குடும்பத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் காவலர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினர் தகனம் செய்ததை மனித உரிமை மீறல் என நீதிமன்றம் முன்னதாக விமர்சனம் செய்திருந்தது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினரே தகனம் செய்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.

ஹத்ராஸ் விவகாரம் குறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரப் பிரதேச அரசு பரிந்துரைத்த நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறது.

இதையும் படிங்க: ஹத்ராஸில் தொடரும் கொடூரம் : பாலியல் வன்புணர்வுக்குள்ளான குழந்தை

ABOUT THE AUTHOR

...view details