உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள டியோரியா என்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ராஜன் யாதவ்.
இவர் தொகுதி வாக்காளர்களைக் கவரும்விதமாக ஷூ பாலிஷ் போடுவது, வயதானவர்களின் கால்களைக் கழுவுவது, தேங்காய் மற்றும் மாம்பழங்கள் விற்பது எனப் புதுமையான முறையைக் கையாண்டுவருகிறார்.
இது குறித்து ராஜன் யாதவ் கூறுகையில், "பெண்கள், வயதானவர்களின் கால்களை நான் கழுவுகிறேன். ஏனென்றால் அவர்கள்தான் வரும் தேர்தலில் எனது தலைவிதியை தீர்மானிப்பவர்களாகத் திகழ்கிறார்கள்.
வாக்காளர்கள் அனைவரும் கடவுளுக்கு நிகரானவர்கள். அரசியல் தலைவர்கள் வாக்காளர்களின் ஆசீர்வாதத்தால் நல்ல சம்பளம் பெற்று வசதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
அந்த வகையில் வாக்காளர்களைக் கடவுளாகப் பார்ப்பதுடன், அவர்களின் ஷூக்களுக்குப் பாலிஷ் போடுவது, கால்களைக் கழுவுவது எனச் செய்கிறேன்" என்றார்.
கோரக்பூரிலுள்ள தீன் தயாள் உபாத்யாய பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்துள்ளார் ராஜன் யாதவ். இதையடுத்து உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் காலியாக இருக்கும் 10 மாநிலங்களவைத் தொகுதிகளுக்காக நவம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் டியோரியா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலின் முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.