கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர் சூரஜ். இவருடைய மனைவி உத்ரா. சூரஜுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பதை அறிந்த உத்ரா அவரைக் கண்டித்துள்ளார்.
இதனால், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், உத்ராவை கொலைசெய்வதற்காக சுரேஷ் என்பவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து நச்சுப்பாம்பை வாங்கினார் சூரஜ்.
மே 7ஆம் தேதி இரவு 2.30 மணியளவில் உத்ரா தூங்கிக்கொண்டிருந்தபோது அப்பாம்பை எடுத்து அவரது காலடியில் போட்டு கடிக்கச்செய்தார். இதையடுத்து உத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். பின்னர், உத்ரா அவரது தாயார் வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவம் பெற்றுவந்தார்.
தனது முதல் திட்டம் தோல்வியடைந்ததையடுத்து சூரஜ் மீண்டும் சுரேஷிடம் வேறொரு நச்சுப்பாம்பை வாங்கி, தனது மாமியார் வீட்டிற்குச் சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த உத்ராவை கடிக்கச் செய்து கொலைசெய்தார்.
இதில் சந்தேகமடைந்த உத்ராவின் பெற்றோர் சூரஜ் மீது காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, கொலையில் தொடர்புடைய சூரஜ், சுரேஷ் உள்ளிட்ட மூன்று பேரைக் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.