இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குஜராத், டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்சிகளில் கலந்துகொண்டு வருகின்றார். இதன் ஒரு பகுதியாக ட்ரம்ப் தனது குடும்பத்தினரோடு தாஜ்மஹாலைக் காண உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு அகமதாபாத் நகரிலிருந்து தனி விமானம் மூலமாக வந்தடைந்தார்.
உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அவரை அரசு மரியாதையுடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, ட்ரம்புக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாரம்பரிய கலைஞர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்பின் பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ தாஜ்மஹால் அமைந்துள்ள இடத்தை அடைந்த டொனால்டு ட்ரம்பும், அவரது குடும்பத்தினரும் யமுனை ஆற்றின் அழகை ரசித்தவாறு அங்கு அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீரூற்றின் முன்னர் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா, மருமகன் ஜெரட்டும் ஜோடியாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
ஆக்ரா வந்தடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ! அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும், அவரது இணை மெலானியா ட்ரம்புக்கும் தாஜ்மஹாலின் வரலாற்றை எடுத்துக்கூறிய வழிகாட்டியிடம் புன்னகையும் ஆர்வமும் ஒருசேர அவர்கள் இருவரும் செவிமடுத்தனர்.
தாஜ்மஹாலில் சுற்றுலாப் பயணிகளைத் தொல்லை செய்துவரும் ஆக்ரோஷமான மாகேக் குரங்குகளிடமிருந்து அதிபருக்கு பாதுகாப்பை வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ள தாஜ்மஹால் பாதுகாப்புப் படையின் தலைவர் பிரிஜ் பூஷண், தாஜ்மஹால் பகுதியில் ட்ரம்ப்பின் பாதுகாப்புக் குழுவில் ஐந்து நீண்டவால் குரங்குகளைச் ( லாங்கர்கள் ) சேர்த்து பாதுகாப்புப் பணியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஆக்ரா நகரில் ஐந்தடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உத்தரப் பிரதேச காவல் துறையினர் அங்கு பாதுகாப்புப் பணிகளில் குவிக்கப்பட்டிருந்தனர். அந்நகரின் முக்கியப் பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நகரின் முக்கியப் பகுதிகளில் 600 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபரின் வருகையையொட்டி அந்நகரை அழகுபடுத்தும்வகையில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. நகரின் சுவர்களில், இந்தியாவை பிரதிபலிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள அந்நகர் பார்ப்போரை கவர்ந்திழுக்கிறது. இதற்காகக் கோடிக்கணக்கில் செலவிட்டுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தாஜ்மஹால் அருகே, கலாக்ருதி அரங்கில், 'முகபத் - தாஜ்' என்ற கலாசார நிகழ்ச்சியை ட்ரம்ப் பார்த்து ரசிக்கிறார்.
இதையும் படிங்க : ஹோலி முதல் கோலி வரை... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உரையின் சாராம்சம்!