அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவரின் மனைவி மெலனியாவுடன் வாஷிங்டனிலிருந்து நேற்று தனி விமானம் மூலம் புறப்பட்ட ட்ரம்ப், குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இன்று நண்பகல் வந்திறங்குகிறார்.
விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடி, டொனால்ட் ட்ரம்பை வரவேற்கிறார். இந்தியா வரும் ட்ரம்ப்பிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் வரையிலான 22 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ட்ரம்ப்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து புதிதாகக் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்று 1.25 லட்சம் மக்களின் முன்னிலையில், ட்ரம்ப் தோன்றி உரை நிகழ்த்தவுள்ளார். தொடர்ந்து பிற்பகல் ஆக்ராவிலுள்ள தாஜ் மஹாலை ட்ரம்ப் குடும்பத்தினர் பார்வையிடுகின்றனர்.