ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஜால்மே கலில்ஜாத் நேற்று இந்தியா வந்திருந்தார்.
சில மணி நேரமே நீடித்த இந்தப் பயணத்தின் போது, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரசாத், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் ஷ்ரிங்லா ஆகியோர் சந்தித்து ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் அரசியல் சூழல் குறித்து அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து ஈடிவி பாரத் மூத்த பத்திரையானர் ஸ்மிதா ஷர்மாவிடம் பேசிய அரசு உயர் அலுவலர் ஒருவர், "சில மணி நேர பேச்சுவார்த்தைக்கு அவர் (கலில்ஜாத்) இவ்வளவு தூரம் வந்திருப்பதை வைத்தே பேச்சுவார்த்தையின் அவசரம் தெரிகிறது.
ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் அரசியல் சூழல், பாதுகாப்பு, அமெரிக்கா-தலிபான் பேச்சுவார்த்தையின் தாக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப இந்தியா பங்காற்ற வேண்டும் என அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது" என்றார்.
ஆப்கானிஸ்தானில் நீண்டகாலமாக நிலவிவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர, அங்குள்ள தலிபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி அமைதி ஒப்பந்தமிட்டுக் கொண்டன.
ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அந்நியப் படையினரை விலக்கிக்கொள்ள அமெரிக்காவும், வன்முறையைக் கைவிட தலிபான் அமைப்பும் இந்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டன.