இந்திய சுற்றுலா, விருந்தோம்பல் சங்கங்களின் கூட்டமைப்பு (FAITH) மற்றும் அதன் உறுப்பு சங்கங்கள் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேலை இன்று (ஆகஸ்ட் 12) நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக ஃபெய்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட்-19 நெருக்கடி காரணமாக நலிவடைந்துள்ள சுற்றுலா துறையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சகத்தை கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொண்டோம். அதன் ஒரு பகுதியாக, சர்வதேச சுற்றுலா பயணிகளை கவர இந்திய சுற்றுலா துறையின் தயாரிப்புகளை காட்சிப்படுத்த 'இந்திய சுற்றுலா சந்தை' நடத்த வேண்டும் என கூட்டமைப்பு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
நவம்பர் மாதத்தின் முதல் அல்லது நான்காவது வாரத்தில் முழுமையாக இயங்க அனுமதி வழங்க வேண்டும். இ-பாஸ் விதிமுறையை தளர்த்த வேண்டும். சுற்றுலா நிறுவனங்களின் நிதி நெருக்கடியை போக்க ரிசர்வ் வங்கியின் சலுகைகளை நீட்டிக்க வேண்டும்.
சுற்றுலா, விருந்தோம்பல் நிறுவனங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். அனைத்து சுற்றுலா தளங்களையும் திறக்க வேண்டும். போக்குவரத்து வாகனங்கள், மதுபான விடுதி உரிமங்களை புதுப்பிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுற்றுலா துறையை மீண்டும் பழையபடி தொடங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக செயல்படுத்தப்படும் என அமைச்சகம் வாக்குறுதி அளித்துள்ளதாக கூட்டமைப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.