தேர்வாளர்களின் தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து தேவைகளுக்கு தேர்வாணையம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றன.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல தளர்வுகளுடன் ஜுலை 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அறிவித்தபோது, யுபிஎஸ்சி, சிவில் சர்வீசஸ் தேர்வுகள் 2019-க்கான நேர்முகத் தேர்வுகளை நடத்தி வந்தது. அப்போது, இரண்டாயிரத்து 304 தேர்வர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட வேண்டியிருந்தது.
அன்றைய சூழலை கருத்தில்கொண்டு, தேர்வாணையம் 623 பேருக்கான நேர்முகத் தேர்வை ஒத்திவைத்தது. கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுவரும் சூழலில், மீதமுள்ள தேர்வர்களுக்கு ஜூலை 20 முதல் 30 வரை நேர்முக தேர்வை நடத்த ஆணையம் முடிவு செய்தது. இதுதொடர்பாக அனைத்து தேர்வர்களுக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.