காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உள்பட 8 காவலர்கள் ரவுடிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டுவந்த பிரபல ரவுடி விகாஸ் துபே, காவல் துறையினரால் ஜூலை 10ஆம் தேதி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். காவலர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் துபேவுக்கு காவல் உதவி ஆய்வாளர் கே.கே. சர்மா துப்பு கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தன் உயிருக்கும் தனது மனைவியின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவர் உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், "காவல்துறையின் ஒரு அங்கமாக இருந்தாலும் செய்திகளில் வெளியான தகவல்களின் அடிப்படையில் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. விகாஸ் துபே, பிரபாத் மிஸ்ரா, அமர் துபே ஆகியோர் காவல்துறையிடமிருந்து தப்பித்ததாகவும், சர்ச்சைக்குரிய விதமாக அவர்கள் காவலர்களால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.