உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரிலுள்ள பிக்ரு கிராமத்தில் தன்னை கைது செய்யவந்த எட்டு காவலர்களை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபேவை மத்திய பிரதேச காவல் துறையினர் கடந்த மூன்றாம் தேதி அதிகாலை சுட்டுக் கொன்றனர்.
இவர் இறந்து பத்து நாள்களுக்கு மேலான நிலையில், அவரது மனைவி ரிச்சா துபே உள்ளூர் நாளிதழ் ஒன்றுக்கு விகாஸ் துபே குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், “உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரிலுள்ள பிக்ரு கிராமத்திலுள்ள வீட்டில் ஊரடங்கு சமயத்தில் காவலர்கள் எங்களது வீட்டிற்கு வந்து உணவு சாப்பிடுவார்கள். காவலர்கள் விகாஸ் துபேவை பயன்படுத்திவிட்டு பிறகு அவர் தேவையில்லை என்று எண்ணியபோது அவரை கொன்றுவிட்டனர்.
சட்டத்தின் முன் விகாஸ் துபே குற்றவாளியாக இருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் நல்ல கணவர். எங்களது குழந்தைகளுக்கு பொறுப்பான தந்தையாகவே இருந்துள்ளார். அவர் எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவந்தார்.
விகாஸ் துபே எனது சகோதரரின் நெருங்கிய நண்பர். எனது சகோதரர்தான் எங்களது திருமணத்தை நடத்திவைத்தார். அவருடைய தாயுடன் எனக்கு கருத்து வேறுபாடு இருப்பினும், ஒருபோதும் அவர் என்னை உறவினர்கள் முன் விட்டுக்கொடுத்ததில்லை.
ஜூலை மூன்றாம் தேதி அந்த துயரமான சம்பவம் நடைபெறுவதற்கு முன் அதிகாலை இரண்டு மணியளவில் விகாஸ் துபே என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். பிக்ருவிலுள்ள தன்னுடைய கூட்டாளிகளை காவலர்கள் கொன்றுவிட்டதாகவும், தான் தப்பித்து சென்றுகொண்டிருப்பதாகவும் கூறினார். பாதுகாப்பு கருதி தன்னையும் வீட்டிலிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தினார்.
இதுதான் நான் கடைசியாக அவரிடம் பேசியது. பின்பு, நண்பர் ஒருவரது வீட்டில் தங்கியிருந்த நான் தொலைக்காட்சி செய்திகளின் வாயிலாகவே நடந்த சம்பவத்தை அறிந்தேன். எனக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கையுள்ளது. என் கணவரின் இறப்பு குறித்த உண்மை மேலோங்கும்” என அவர் கூறியுள்ளார்.