உத்தரப் பிரதேச மாநிலத்தின் பண்டேல்கண்ட் மாவட்டத்தில் நீர் வளங்களை நிர்வகிக்கும் நீர் மேலாண்மை திட்டத்தில் இந்தியா-இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் உறுதியாகி உள்ளது.
இதில் இந்தியாவிற்கான இஸ்ரேல் நாட்டின் தூதர் டாக்டர் ரான் மல்கா மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசின் விவசாய உற்பத்தி மேலாண்மை ஆணையர் அலோக் சின்ஹா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தமானது இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் சர்வதேச முன்னேற்ற ஒத்துழைப்பு நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் மாஷாவ் நிறுவனம் இந்த நீர் மேலாண்மை திட்டத்தை முன்னெடுக்கும் என அறிய முடிகிறது.
இத்திட்டத்தின் கீழ் மேம்பட்ட விவசாய நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த சொட்டு நீர் பாசனம் மூலம் இப்பகுதியில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் பண்டேல்கண்டை அடுத்துள்ள 25 கிராமங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒபந்தத்தை ஒரு வரலாற்று தருணம் என்று அழைத்த ஆணையர் சின்ஹா, "பண்டேல்கண்டில் பாசன நீர் பிரச்னையை தீர்க்க இஸ்ரேலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதற்காக 25 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது விவசாயிகளுக்கும் மிகவும் பயனளிக்கும்" என்றார்.
மேலும், இது குறித்து பேசிய இஸ்ரேல் நாட்டின் தூதர் டாக்டர் ரான் மல்கா, "இஸ்ரேலின் நீர் நிர்வாகத்தின் தொழில்நுட்பம் நிச்சயமாக இந்தியாவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான பிரதமர் மோடியின் இலக்கை நோக்கிய ஒரு முக்கிய படியாகும்" என கூறினார்.