நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. 20 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் உத்தரப் பிரதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கை எனக் கூறி கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சைப் பெறும் நோயாளிகள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது.
மாநில அரசின் இந்த உத்தரவை தொடர்ந்து, கரோனா நோயாளிகள் மொபைல் போன் பயன்படுத்துவதை தடை செய்யுமாறு அனைத்து மருத்துவ பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அம்மாநில மருத்துவ கல்வி இயக்குநர் கே கே குப்தா உத்தரவிட்டார். மேலும், நோயாளிகள் தங்களது குடும்பத்தினருடன் பேச ஏதுவாக மருத்துவமனைகளுக்கு இரண்டு மொபைல் போன்கள் வழங்கப்படும் என்றும், அதில் அனுமதிபெற்று நோயாளிகள் தங்களது குடும்பத்தினருடன் பேசிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார்.