உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவருபவர் இன்டெசர் அலி. காவல் துறையினரின் அனுமதியின்றி தாடியை அவர் வைத்திருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், காவல் துறை மேலிடம் அவரைப் பணியிடை நீக்கம் செய்து, அவர் மீது ஒழுங்க நடவடிக்கை மேற்கொண்டது. இந்த விவகாரம் அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இது தொடர்பாக ஊடகங்களைச் சந்தித்த பாக்பத் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் சிங், "காவல் துறையில் பணியாற்றும் எந்தவொரு நபரும் தாடியை வைத்திருக்க விரும்பினால், அதற்கு உரிய அனுமதியை அவர்கள் பெற வேண்டும்.
உதவி ஆய்வாளர் இன்டெசர் அலியிடம் அவரது தலைமை ஆய்வாளர் பலமுறை இதற்கு அனுமதி பெற வேண்டுமென கூறியுள்ளார்.
இருப்பினும், அவர் அதற்கு இணங்கவில்லை. தாடியை அனுமதியின்றி வைத்திருந்தார். இதன் காரணமாகவே அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.
காவல் துறையினரின் துறைசார்ந்த வழிகாட்டுதல்களின்படி, சீக்கியர்கள் மட்டுமே தாடியை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற அனைத்து காவலர்களும் சுத்தமாக தாடியை மழித்திருக்க வேண்டும்" எனக் கூறினார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் அலி கூறுகையில், "தாடியை வைத்திருக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தேன். அதற்கு இதுவரை, எந்தப் பதிலும் கிடைக்கவில்லை" எனத் தெரிவித்தார்.