ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரம்
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீரின் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நேற்று நடத்தப்பட்டது. 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்குப் பிறகு இரண்டாவது முறை நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில், ஐ.நா.வின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் பத்து நிரந்தரமில்லா உறுப்பினர்களும் அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கில் பேசினர்.
இதில் நிரந்தர உறுப்பினரான சீனா, காஷ்மீரின் கள நிலவரம் குறித்தும், 370 நீக்கத்துக்குப்பின் மறுகட்டுமான பணிகள் குறித்தும் கேள்விகளை எழுப்பியது.
காஷ்மீரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கைது, தகவல் தொடர்பு கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து முக்கியக் கேள்விகளை சீனா முன்வைத்தது. இருப்பினும் கடந்த ஆகஸ்ட் மாத பேச்சுவார்த்தையைப் போல், இந்தப் பேச்சுவார்த்தையிலும் எந்தத் தீர்மானமோ முக்கிய முடிவுகளோ எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அரணாக ஃபிரான்ஸ்
ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான ஃபிரான்ஸ், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்வைத்தது. இது குறித்து ஃபிரான்ஸ், காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தான் தனியே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய விவகாரம் எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் சீனா இந்தியாவுக்குத் தரும் இடைஞ்சல்களுக்கு அரணாக ஃபிரான்ஸ் பாதுகாத்துவருகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தமில்லா உறுப்பினரான எஸ்டோனியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் உர்மஸ் ரெயின் சாலு, 'காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தானின் பிரச்னை; இது இருநாட்டு விவகாரம்' என ஃபிரான்சின் நிலைப்பாட்டையே தங்களின் நிலைப்பாடாகத் தெரிவித்துள்ளார்.