இந்தியா இதுவரை சந்தித்திடாத அளவு கடுமையான பொது சுகாதார நெருக்கடியை சந்திக்கவுள்ளது. இதுவரை தேசத்தையே ஸ்தம்பிக்கச் செய்த ஒரு சுகாதாரப் பேரழிவை இந்தியா சந்தித்ததில்லை. முடக்கம் என்ற வார்த்தை பெரும்பான்மையான இந்தியர்களுக்கு வேற்று சொல் போல தெரியும். மார்ச் 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தேசிய அளவு முடக்கம் என அறிவித்தபின்புதான் இந்தியர்களுக்கு இந்த வார்த்தைக்கான அர்த்தம் புரிந்திருக்கும்.
மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்படவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா விரைவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. மார்ச் 13ஆம் தேதி கரோனா தொற்றால் உயிரிழந்த 68 வயது மூதாட்டியை நிகாம்போத் காட் அலுவலர்கள் தகனம் செய்ய மறுத்துவிட்டனர். கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது பற்றிய வழிமுறைகள் தெரியாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
பின்னர் மூதாட்டி சிகிச்சை பெற்றுவந்த ஆர்எம்எல் மருத்துவமனையின் மருத்துவர்கள் தலையிட்டபின், மின் மயனாத்தில் மூதாட்டியின் உடல் தகனம் செய்யப்பட்டது. மூதாட்டியின் உறவினர்கள் கொடுத்த அழுத்தத்தில்தான் மருத்துவர்கள் இப்பிரச்னையில் தலையிட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஒரு பிரச்னை மட்டுமல்ல, பிகாரில் உள்ள கிராமம் ஒன்றில், கரோனா தொற்றால் இறந்தவர் உடலை நீண்ட நேரமாக வீட்டிலேயே வைத்திருந்தனர். இறுதிச் சடங்குக்காக அப்பகுதியை சேர்ந்த பலரும் அங்கு கூடினர். இதனைத் தொடர்ந்து அக்கிராமத்தை சேர்தத அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அதேபோல் கொல்கத்தாவில் கரோனா தொற்றால் இறந்த ஒருவரின் உடலை அவரது உறவினர்கள் கண்டுகொள்ளவில்லை. மயான ஊழியர்களும் தொற்றுக்கு பயந்து தகனம் செய்ய மறுத்தனர். 10 மணி நேர காலதாமதத்துக்குப் பின்னர் அவரது உடல் மின் மயனாத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதனால் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்வது பற்றிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.