உன்னாவ் பாலியல் வன்புணர்வு வழக்கில் வழக்கத்துக்கு விரோதமான வாதமாக பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் நேற்று டெல்லி நீதிமன்றத்தில் தான் தவறு செய்திருந்தால் தூக்கிலிடுமாறும் தன் மீது ஆசிட் வீசுமாறும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
உன்னாவ் பாலியல் வன்புணர்வு வழக்கில் பாதிக்கப்பட்டவரின் தந்தையைக் கொலை செய்த குற்றம் தொடர்பான விசாரணையின் போது செங்கார் இவ்வாறு கூறினார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி தர்மேஷ் சர்மா, "நீங்கள் குற்றவாளி என்பது நிரூபணமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டபோது, அந்த காவலர்களை நீங்கள் தொடர்பு கொண்டு பேசியது ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது. எனவே, குற்றத்தை நீங்கள் மறுக்க முடியாது" என்றார்.
அப்போது குற்றவாளி செங்காரிடம் நீதிபதி கூறும்போது, நீங்கள் ஏற்கெனஎ குற்றவாளிதான், எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவலில் அடித்துத் தாக்கப்படும் போது போலீஸாருடன் செங்கார் தொடர்பில் இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கிறது என்றார். இதற்கு செங்கார் தனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் என்னை விட்டு விடுங்கள் என்றார்.
ஆனால் நீதிபதியோ, “உங்களுக்கு மட்டுமா குடும்பம் இருக்கிறது, அனைவருக்கும் குடும்பம் இருக்கிறது. குற்றம் செய்வதற்கு முன் இதையெல்லாம் யோசித்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் சட்டங்கள் அனைத்தையும் உடைத்திருக்கிறீர்கள். இப்போது வந்து அனைத்தையும் மறுப்பீர்களா? எதுவரை உங்களால் மறுக்க முடியும்?” என்று கேட்டார்.
இந்த வழக்கில் செங்கார் உட்பட 8 பேர் குற்றவாளி என, டெல்லி சிறப்பு நீதிமன்றம் மார்ச் 4ஆம் தேதி தீர்ப்பளித்தது. உன்னாவ் பாலியல் வன்புணர்வு வழக்கில், செங்கருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் கடந்தாண்டு டிசம்பர் 20ஆம் தேதி தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொள்கையை மறந்தவர் சிந்தியா - ராகுல் குற்றச்சாட்டு