உலகளாவிய அச்சுறுத்தலான கோவிட்-19 பெருந்தொற்றுநோய் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, டெல்லியில் வேகமெடுத்துள்ள கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கில், பொருளாதார நிலைமைகளை சீர்ப்படுத்த தளர்வளிக்கப்பட்டது.
ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்ட இச்சூழலில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வெறிச்சோடி கிடந்த டெல்லியின் சாலைகளில் திடீரென வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக அறிய முடிகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த அலுவலர்கள், "ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் அவற்றின் முழு திறனில் இயங்கத் தொடங்கியுள்ளன. அதன் காரணமாக வெளியாகும் அபாயகரமான புகைகள் தற்போது காற்றை மிக வேகமாக மாசுப்படுத்தி வருகின்றன. வரவிருக்கும் நாள்களில் காற்றின் தரம் இன்னும் கடுமையானதாக மாறும். கோவிட்-19 பரவல் அதிகரித்துவரும் சூழலில் அரசு இந்த புதிய பிரச்னையையும் கையாள வேண்டிய சூழல் ஏற்படும்" என எச்சரித்தனர்.
தலைநகர் டெல்லியின் காற்றின் தரக் குறியீடு (Air Quality Index) 135ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 'கடுமையான' பாதிப்பை கண்டதன் அறிகுறியாக கருதப்படுகிறது.