நாடு முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டுவருகின்றன.
கரோனா பரவலை முடிந்தவரை குறைக்க பல்வேறு வகையான சாதனங்களையும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து உருவாக்கிவருகின்றனர். இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரிஹஸ்பதி டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் முக அடையாளம் (face recognition), உடல் வெப்பநிலையைக் கண்காணிப்பது, கைகளில் கிருனிநாசினி தெளிப்பது, புற ஊதாக்கதிர்கள் மூலம் கிருமிகளை நீக்குவது ஆகிய அனைத்தையும் மேற்கொள்ளும் ஒரு சாதனத்தை வடிவமைத்துள்ளனர்.
கோவிப்ரோ (COVIPRO) என்று அழைக்கப்படும் இந்தச் சாதனம், தற்போது தெலங்கானாவில் நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு தெலங்கானா அமைச்சர்களின் பாராட்டையும் இந்தச் சாதனம் பெற்றுள்ளது.
'மேக் இன் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக கோவிப்ரோ ஹைதராபாத்தில் வடிவமைத்து தயாரிக்கப்பட்டுவருகிறது. ஒரு நாளில் 400 கோவிப்ரோ சாதனங்கள் வரை உருவாக்க முடியும் என்று பிரிஹஸ்பதி டெக்னாலஜிஸ் தெரிவித்துள்ளது.
இதிலுள்ள எல்.ஈ.டி. திரை முக்கியத் தகவல்களைக் காட்ட உதவும். கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் இந்தத் திரையில் விழிப்புணர்வு செய்திகளையும் பரப்ப முடியும்.