நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனிடையே, மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சர் ராவத்திடம் சமரசம் குறித்து பேசி வருகிறேன்.
முதலமைச்சர் பதவியை மூன்று ஆண்டுகள் பாஜகவுக்கும் இரண்டு ஆண்டுகள் சிவசேனாவுக்கும் அளிப்பது குறித்து பேசினேன். பாஜக ஒத்துக்கொண்டால் சிவசேனா இதனைப் பற்றி யோசிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். நான் இந்த சமரசம் குறித்து பாஜகவிடம் பேசவுள்ளேன்" என்றார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கானத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தன. தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனா, பாஜக ஆகிய கட்சிகளுக்கிடையே முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற விவகாரத்தில் மாற்று கருத்து தொடங்கியது.
இதனால், பாஜக ஆட்சியமைக்க சிவசேனா ஆதரவு தரவில்லை. ஆட்சி அமைக்க எந்த கட்சியும் முன்வராத காரணத்தால், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை வளர்த்தெடுங்கள்! - மோடிக்கு மன்மோகன் அறிவுரை