தமிழ்நாட்டின் தஞ்சை, திருச்சி, புதுகை, நாகை, திருவாரூர், கரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
இந்நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் திருச்சி எம்பி சு. திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை எம்பி எஸ். செல்வராசு ஆகியோர் ஈடிவி பாரத்திடம் இந்தக் கருத்தினை ஞாயிறன்று தெரிவித்தனர்.
இந்த சூழலில், தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முதலமைச்சரின் அறிவிப்பு தொடர்பான கடிதத்தை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோரிடம் டெல்லி நாடாளுமன்றத்தில் வழங்கினார். அப்போது உடன் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களான நவநீதிகிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த், முகம்மது ஜான் உள்ளிட்டோரும் இருந்தனர்.
பின்னர் மத்திய அமைச்சர்களுடன் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக எம்.பி.கள் சுமார் 20 நிமிடம் முதல்வரின் கடிதம் தொடர்பாக விவாதித்தனர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலம் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவினை விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கொண்டாடிவருகின்றனர். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே இதை எதிர்க்கிறார்.
அதிமுக அரசின் சார்பில் நாங்கள் முதல்வரின் அறிவிப்பின் மீதான தொடர் நடவடிக்கையாக அதுபற்றிய கடிதத்தை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களிடம் அளித்துள்ளோம். முதலமைச்சரின் கடிதத்தின் மீது நல்லதொரு முடிவை இரண்டு அல்லது மூன்று நாட்களில் தெரிவிப்பதாக மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர்" என்றார்.
ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை பெற மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் எதுவும் நடத்தத் தேவையில்லை என்ற மத்திய அரசின் முடிவு குறித்து கேட்டபோது, "நாங்கள் மத்திய அமைச்சர்களுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினோம். அதனை தற்போது வெளியே கூற இயலாது. எனினும், நல்லதொரு முடிவை மத்திய அரசு இரண்டொரு நாள்களில் அறிவிக்கும்" என்றார்.
சட்டப்பேரவையில் இதுபற்றி தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படுமா என்றபோது, முதலமைச்சரின் அறிவிப்பு தொடர்பாக தொடர் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் இப்போது எதுவும் கூற முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
மேலும், திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு முன்வைத்த கருத்து குறித்து பேசிய அமைச்சர், "நேரு நீண்ட காலமாக அரசியலில் உள்ளார். நிர்வாகத்திலும் அங்கம் வகித்திருக்கிறார். ஆனால், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக சிறுபிள்ளைதனமாக கருத்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஒரு விஷயத்தை அறிவிக்கிறார் என்றாலே அது கொள்கை முடிவுதான் என்பதை நேரு உணர வேண்டும்" என்றும் கூறினார்.
இறுதியாக காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாறினால் பிற தொழில்களை செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், விரைவில் அதுபற்றி அறிவிக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்த நாள் விழா - சேவல் சண்டைக்கு அனுமதி கோரி மனு!