கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநில மக்களுக்கு பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு 70 ஆயிரத்து 725 டன் உணவு தானியங்களை ஒதுக்கியது. ஆனால் 668 டன் தானியங்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது என மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்திருந்தார் .
இதையடுத்து, அமரீந்தர் சிங் அரசு மெத்தனம் காட்டாமல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உணவு தானியங்களை வழங்குமாறு அவர் தனது ட்விட்டர் பதவில் கேட்டுகொண்டார். இந்நிலையில், முதலமைச்சர் அமரீந்தர் சிங் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய உணவு தானியங்களை வழங்கவில்லை என ஷிரோமனி அகாலி தள் கட்சியைச் சேர்ந்த மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவதிபட்டுவரும் மக்களை கஷ்டப்படுத்தாமல் உடனடியாக அவர்களுக்கு தானியங்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுகொண்டார். இந்த நிலையில், தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அமரீந்தர் சிங் மறுத்துள்ளார்.
மே 1ஆம் தேதி மத்திய அரசு 10 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் பருப்புகளை வழங்குவதாக வாக்குறுதியளித்தது. ஆனால், 2 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் பருப்புகளை மட்டுமே வழங்கியதால் மாநில அரசிடம் இருந்த கோதுமைகளையும் பருப்புகளையும் மே 1ஆம் தேதியில் இருந்து 18 மாவட்டங்களில் விநியோகம் செய்துவருவதாக தெளிவு படுத்தினார்.