மத்திய அரசு சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்தியாவின் சில மாநிலங்கள் இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிவருகின்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறும் கேரளா, காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறும் பஞ்சாப், ராஜஸ்தான் இச்சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றின.
அதேபோல டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்த்திற்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் ஜனவரி 30ஆம் தேதி மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த கோபால் என்ற இளைஞர் ஒருவர் சுதந்திரம்தானே வேண்டும், எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து கூட்டத்தை நோக்கிச் சுட்டார். இந்தத் திடீர் தாக்குதலில் ஒரு மாணவருக்கு காயம் ஏற்பட்டது.
பின்னர் துப்பாக்கியுடன் வந்த அந்த நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர். விசாரணையில் அவர், 17 வயதே ஆன சிறுவன் எனத் தெரியவந்தது. தற்போது விசாரணைக்காக் அவர் 14 நாள்கள் காவலில் உள்ளார்.
அதன்பின் இரண்டு நாள்கள் கழித்து டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் அருகே இருக்கும் ஷாகீன் பாக் பகுதியிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது. அங்கு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடந்துவருகிறது. இதை எதிர்க்கும்விதத்தில் இளைஞர் ஒருவர் அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தினார். இவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.