மேற்கு வங்க மாநிலம் பாரசத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்கி பந்தோபதாய். இசையில் முனைவர் பட்டம் பெற்ற கார்கி தனக்கு விவாகரத்து ஆனதிலிருந்து ஓய்வுபெற்ற தன் பெற்றோருடன் வசித்துவருகிறார்.
இந்நிலையில், குடும்பத்தின் சூழலை கருத்தில் கொண்டு கார்கி தனக்கென ஒரு வேலையைத் தேட ஆரம்பித்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக பல இடங்களில் தேடியும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
இதனால், தன்னோடு சேர்ந்து தன் பெற்றோரும் பசியில் வாடுவதைக் கண்டு குற்ற உணர்ச்சியும், விரக்தியும் அடைந்தார் கார்கி.
இதையடுத்து, தன்னோடு சேர்த்து தன் குடும்பத்தையும் கருணைக் கொலை செய்துவிடுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கார்கி மனு அளித்துள்ளார். இந்த மனுவானது பாரசத் நகராட்சித் தலைவர் சுனில் முகஜீக்கி அனுப்பப்பட்டுள்ளது. கார்கியின் பெற்றோர்களுக்கு உதவித் தொகை வழங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த சுனில் முகஜீக்கி, இது குறித்து விசாரணை மேற்கொண்ட பிறகே என்ன செய்வதென்று முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
முனைவர் பட்டம் பெற்ற பெண் வேலையின்மை, வறுமை காரணமாக குடும்பத்துடன் கருணை கொலைக்கு மனு அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.