மும்பையிலுள்ள கொங்கன் பிராந்தியத்தில் கெட் தாலுக்காவின் மும்ப்கே பகுதியில் பூர்வீக சொத்துகளை தாவூத் இப்ராஹிம் வைத்துள்ளார்.
தாவூத் தனது சொந்த கிராமத்தில் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் பல அசையா சொத்துக்களை வைத்துள்ளார். இந்த சொத்துக்கள் அனைத்தும் தாவூத்தின் சகோதரி ஹசினா பார்கர் மற்றும் தாய் அமினா பீ ஆகியோரின் பெயரில் உள்ளன.
கெட் பகுதியில் உள்ள முக்கிய சொத்து ஹசீனா பெயரிலும், பிற சொத்துக்கள் அவரது தாயார் அமினா பெயரிலும் உள்ளன. தாவூத்தின் உடன்பிறந்தவர்கள் தற்போது மும்பையில் உள்ள பக்மோடியா தெருவில் வசிக்கின்றனர்.
1980 காலக்கட்டத்தில் பங்களாவில் வசித்து வந்த தாவூத்தின் உறவினர்கள், 1993ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு வேறு பகுதிக்கு மாறினர். இதனால், அந்த சொத்துகள் தற்போது மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளன. மேலும், மூன்று மாடி உயரமான கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
கடந்த ஆண்டு, தாவூத்தின் சொத்து மதிப்பீடு செய்யும் பணிகள் எஸ்ஏஎஃப்இஎம் (SMUGGLERS AND FOREIGN EXCHANGE MANIPULATORS) மற்றும் வருமான வரி குழுக்கள் மூலம் தொடங்கியது. தற்போது தாவூத், அவரது உறவினர்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது இவை அனைத்தும், கடத்தல்காரர்கள் மற்றும் அந்நிய செலாவணி கையாளுபவர்கள் சட்டத்தின் கீழ் ஏலம் விடப்படவுள்ளது. ஏலம் விடப்படும் ஏழு சொத்துக்களின் ஒட்டுமொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.