இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17-ஐ எட்டியுள்ளது. இதில் மஹாராஷ்டிரா (4 பேர்) முதலிடத்திலும், குஜராத் (3 பேர்) இரண்டாம் இடத்திலும் உள்ளன. மார்ச் 13ஆம் தேதி கர்நாடக மாநிலம் கல்புர்கியை சேர்ந்த 76 வயது முதியவர், இந்தியாவில் கரோனா வைரஸ் காரணமாக முதன்முதலில் உயிரிழந்தார். அவர் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டு வந்தவர் என தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு முன்பே உடல்நிலை குன்றியிருந்ததாக சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அலுவலர் கூறினார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர்கள், மற்றவர்கள் கரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் பழகியவர்கள்.
டெல்லியில் கரோனாவால் உயிரிழந்த 69 வயது மூதாட்டிக்கு துபாயிலிருந்து திரும்பிய அவரது மகனிடம் இருந்து தொற்று பரவியதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தானில் உயிரிழந்த இருவரில் ஒருவருக்கு சிறுநீரகப் பிரச்னையும், சக்கரை நோயும் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய புள்ளிவிவரப்படி கடந்த 14 நாட்களில் கரோனா வைரஸ் பாதிப்பால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தகவல்படி கரோனா பாதிப்பால் நேரும் இறப்பு 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் இந்திய மக்கள் தொகை கணக்கை வைத்து பார்க்கும்போது, கரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என துறை சார்ந்த அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மருந்து இந்தியாவில் இல்லாதது மருத்துவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய அரசாங்கம் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் ‘ஹைட்ராக்சி க்ளோரக்யுன்’ (Hydroxychloroquine) எனும் அத்தியாவசிய மருந்தை விற்கவும் விநியோகிக்கவும் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஹைட்ராக்சி க்ளோரக்யுன் மருந்து கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என மத்திய அரசு நம்புகிறது. எனவே அதை விற்பதோ, விநியோகிப்பதோ, அது சம்பந்தப்பட்ட பொருட்களை தயாரிப்பதோ கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.