டெல்லி:இந்தியாவில் தற்போது வரை 18 பேருக்கு உருமாறிய கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த 18 பேரில், 6 பேர் பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்கள். குறிப்பாக பெங்களூருவைச் சேர்ந்த மூன்று பேர், ஹைதராபாத்தைச் சேர்ந்த இரண்டு பேர், பூனேவைச் சேர்ந்த ஒருவர் இதில் அடங்குவர்.
இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகையில், "உருமாறிய கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் தனித் தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் பயணித்த நபர்கள், தொடர்பிலிருந்த குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது" எனக் கூறியுள்ளது.
பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய பயணிகளின் விவரம்:
கடந்த நவம்பர் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சுமார் 33 ஆயிரம் பேர் பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர். அவர்களை கண்டறிந்து ஆர்டி பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய ஐசிஎம்ஆர் ஆலோசகர் சுனிலா கார்க் கூறுகையில், "புதிய வகை கரோனா பரவல் குறித்து மத்திய அரசு விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கரோனா வைரஸ் 23 வகையாக மரபணு மாற்றம் அடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள மரபணு மாற்ற கரோனாவானது N501Y ஆகும். இந்த கரோனா மிகவும் ஆபத்தானது. கரோனாவைக் காட்டிலும் இந்த புதிய வகை கரோனா 70 விழுக்காடு வேகமாக பரவக்கூடியது" என்றார்.
முன்னதாக பிரிட்டன் உடனான விமான சேவைகளை இந்திய அரசு டிசம்பர் 31ஆம் தேதி வரை ரத்து செய்தது.
இதையும் படிங்க:'மக்கள் வாழ்வை மகிழ்ச்சிகரமாக்குவதே அறிவியலின் இலக்கு'- வெங்கையா நாயுடு