மகாராஷ்டிராவின் வடக்கு எல்லை மாவட்டமான ஜல்கான், முக்தாய் நகரில் நடந்த விவசாயிகள் பேரணியில் மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார். இந்தப் பேரணியில் மூத்த தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவாரும் கலந்துகொண்டார்.
விவசாயிகள் பேரணி
பேரணியில் பேசிய உத்தவ் தாக்கரே, 'பாஜகவால் முடிந்தால் எங்களது கூட்டணி ஆட்சியை கலைத்துப் பார்க்கட்டும். மகாராஷ்டிராவில் ஏப்ரல் மாதத்துக்குள் தாமரை மலரும் என்று பாஜகவினர் கூறுகின்றனர்.
உங்களின் திட்டத்தை நான் அறிவேன். எங்களது மகாராஷ்டிரா விகாஷ் அகாதி (எம்.வி.ஏ.) கூட்டணி சாமானியர்களின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. சாமானியர்களின் வளர்ச்சியை நோக்கமாக கொண்டு பாடுபட்டு வருகிறோம்.
கட்டணமில்லாத மின்சாரம்
நாங்கள் (சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) பதவியேற்றதிலிருந்து, எங்களை விமர்சிப்பதை பாஜகவினர் வாடிக்கையாக கொண்டுள்ளீர்கள். எங்களது கூட்டணி வெகுநாட்கள் நீடிக்காது என நீங்கள் பேசிவருகிறீர்கள்.
சிவசேனா ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் விவசாயிகளின் கடனை தீர்ப்பதாக உறுதி அளித்தது. அந்த வகையில் விவசாயிகளுக்கு இரண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். அரசிடம் வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு தனிக்கடன் வழங்கப்படும். அதேபோல் விவசாயிகளுக்கு பகலிலும் கட்டணமில்லாத மின்சாரம் மற்றும் பாசன நீரை முழுமையாக வழங்குவது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சவால் ஏற்பு
நிச்சயமாக, விவசாயிகளின் பிரச்னைகளில் கவனம் செலுத்தி மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும். பாஜகவினர் எங்களது ஆட்சியை கலைத்துவிடுவதாக கூறுகின்றனர். எங்களுடன் திறமையான வழிகாட்டி சரத் பவார் உள்ளார்.
நான் பாலசாஹிப் தாக்கரேவின் மகன். உங்களது சவாலை ஏற்கிறேன். மக்களின் ஆசீர்வாதமும், திறமையான வழிகாட்டியும் எங்களுடன் உள்ளனர். முடிந்தால் எங்களது ஆட்சியை கவிழ்த்துப் பாருங்கள்' என விவசாயிகள் மற்றும் தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் மத்தியில் பேசினார்.