உலக நாடுகளில் முக்கியமாக இந்தியா போன்ற மூடநம்பிக்கை அதிகமாகவுள்ள நாடுகளில் பெண்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வந்தாலும், அந்தப் புறக்கணிப்புகளையெல்லாம் தாண்டி பெண்கள் தொடர்ந்து சாதித்தே வருகின்றனர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லுவார்கள் என்று கருதப்பட்ட இந்திய ஆண் நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக நடையைக்கட்ட இரு பதக்கங்களைப் பெற்று இந்தியாவின் மானத்தை காப்பாற்றியவர்கள் பி.வி. சிந்துவும்,சாக்ஷி மாலிக்கும்தான். அவர்கள் மட்டுமல்ல தீபா கர்மாகர், ஹிமா தாஸ் என்று பெண்களின் சாதனைகள் நீண்டு கொண்டுவருகிறது. அந்த வரிசையில் நாட்டிற்குப் பெருமை சேர்த்ததில் தற்போது வழக்கம்போல வனிதா, ரிது என இரு பெண்கள் சேர்ந்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த ரிது கரிதால், 2007ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவில் பணிபுரிந்து வருகிறார். இரு குழந்தைகளுக்குத் தாயான இவர்தான் இந்தியா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பிய மங்கல்யான் திட்டத்தில் துணை செயல்பாட்டு இயக்குநராக பணிபுரிந்தவர். சிறு வயதிலிருந்தே விண்வெளி குறித்து அறிந்துகொள்ளவும் அங்கு செல்லவும் ஆசைப்பட்டவர்தான் இப்போது மங்கல்யான், சந்திரயான் 2 என இஸ்ரோவின் பல முக்கிய திட்டங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.