தமிழ்நாடு, கேரளா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோவில். இங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று சித்திரை முழு நிலவு திருவிழா நடைபெறும். கண்ணகி கோவிலுக்கு செல்வதற்கு தமிழகப் பகுதியான தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி வழியாக மலைப்பாதையில் 7கி.மீ தொலைவு நடைபயணமாக செல்ல வேண்டும். அல்லது கேரளா வழியாக குமுளியில் இருந்து ஜீப் மூலம் 12 கி.மீ பயணம் செய்து வேண்டும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் கலந்து கொள்ளும் இத்திருவிழா ஏற்பாடுகள் தமிழக மற்றும் கேரள அதிகாரிகளால் இணைந்து நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இவ்வாண்டு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி திருவிழா நடைபெற உள்ளது.
இதனிடையே கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷன் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஆகியோர் தலைமையில் திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் தேக்கடியில் நடைபெற்று வந்த இக்கூட்டம் முதன்முறையாக தமிழகத்தில் நடைபெற்றது. தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில், பெரியார் புலிகள் சரணாலய இணை இயக்குநர் ஷில்பா வீ.குமார், மேகமலை வன உயிரினக்காப்பாளர் சச்சின் போஸ்லே, தேனி மாவட்ட வன அலுவலர் கௌதம், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் இரு மாநில காவல், வருவாய், வனம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் கண்ணகி கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கண்ணகி கோவில் பகுதி அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளதால் வனம் பாதிக்காதவாறு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் தேவைக்காக உணவு மற்றும் தண்ணீர் என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கண்ணகி கோவிலில் வழிபாடு செய்து திரும்பும் பொருட்டு வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் நடைமுறையில் இந்த ஆண்டு மாற்றம் செய்யப்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர்களிடம் வாகன தரச்சான்றிதழ் பெற்ற வாகனங்கள் ஒருமுறை அனுமதிச்சீட்டு பெற்றால் போதுமானது, அதனை அன்றைய தினம் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம் என இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் வசதிக்காக கோவிலுக்கு செல்வதற்கு விரைந்து வாகனங்களுக்கு அனுமதி வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைகளையும் இரு மாநில அதிகாரிகள் தலைமையிலான குழு மேற்கொண்டது.
இதில் இரட்டை வாக்காளர்களை கண்டறிந்து, அவற்றை களைவது குறித்து இரு மாநில அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர்.
கேரளா மற்றும் தமிழகத்தில் இரட்டை வாக்காளர் கள் கண்டறிந்து நீக்கப்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் இதற்கு முன்பாக 1200க்கும் மேற்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகள் தந்த தகவலின் அடிப்படையில் 98 பெயர்கள் இருப்பதாக புகார் பெறப்பட்டதில், மேற்கொண்ட விசாரணையில் தற்போது 58பெயர்கள் தமிழகத்தில் நீக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள நபர்கள் தமிழகத்தில் வசிப்பதாக கண்டறியப்பட்டு அவர்களின் பெயர் பட்டியல் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திடம் மேல் நடவடிக்கைக்காக வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.