புதுச்சேரி மாநிலத்தில் சுதேசி பாரதி ஜவுளி ஆணையின் கீழ் இயங்கும் பாரதி மில், சுதேசி காட்டன் மில் ஆகிய இரண்டு ஆலைகளையும் இன்றுடன் (செப்.30) மூடப்படுவதாக மில் மேலாண் இயக்குனர் பிரியதர்ஷன் அறிவித்துள்ளார்.
பிரெஞ்சு ஆட்சி காலத்தில் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக ஆலைகள் இருந்தன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த மில்கள் நலிவடையத் தொடங்கின. இதனை மீண்டும் புனரமைத்து இயக்க பல்வேறு முயற்சிகள் அரசு எடுத்தது. இதற்காக மத்திய அரசிடம் நிதி பெற முயற்சி செய்தும் நிதி கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து ஆயத்த ஆடை பூங்காவாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் ரோடியர், பாரதி, சுதேசி மில்களை இணைத்து புதுவை பஞ்சாலைக்கழகம் என மாற்றமும் செய்தனர்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோடியர் மில் மூடப்பட்டதால் இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து மில்லை இயக்க வேண்டும் என பல கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பாரதி, சுதேசி மில் ஆலைகள் இயங்கி வந்தது தற்போது இந்த ஆலைகளும் இன்று(செப் 30) முதல் மூடப்படுகிறது என்ற அறிவிப்பை புதுச்சேரி சுதேசி பாரதி மில் மேலாண் இயக்குனர் பிரியதர்ஷன் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதேசி பாரதி ஜவுளி ஆணையின் கீழ் இயங்கும் பாரதி மில், சுதேசி காட்டன் மில் ஆகிய இரண்டு ஆலைகளையும் அரசின் உத்தரவுப்படி தொழில் தகராறுகள் சட்டம் 1947 பிரிவின்படி செப்டம்பர் 30ஆம் தேதியுடன் மூடப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிதிலமடைந்து கிடக்கும் ஆங்கிலேயர் காலத்து தடுப்பணை