மகாராஷ்டிர மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மேலும், இடைவிடாத கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள சங்கிலி, கொல்ஹாபூர், புனே, சோலாபூர், சதாரா ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கைவிடப்பட்டு தேசிய பேரிடர் பாதுகாப்பு குழுவினரால், 2 லட்சம் பேர் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில், சங்கிலி மாவட்டத்தில் பொதுமக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு படகில் அழைத்துச் செல்லும்போது, 9 பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க போதுமான அளவு படகுகள் இல்லாததால், தேசிய பேரிடர் பாதுகாப்பு குழுவினர் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். எனவே, மீட்புப் பணியில் ஈடுபடுவர்களுக்கு படகுகள் அளித்து மாநில அரசு உதவ வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட மகாராஷ்டிரா முதமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வெள்ளம் குறித்து கூறும்போது, ‘சங்கிலி மாவட்டம் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கொல்ஹாபூரிலுள்ள 223 கிராமங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன’ என்று தெரிவித்துள்ளார்.